எஸ்.வி.சேகருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை

by Editor / 10-10-2021 10:12:25am
எஸ்.வி.சேகருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை

அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் சிலைக்கு காவி நிற துண்டு அணிவிக்கப்பட்ட தற்காக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து எஸ்வி சேகர் கருத்து தெரிவித்த போது, ''காவி டிரஸ் போட்டா களங்கம் என்கிறார். அப்படியானால் தேசியக்கொடி நமக்கு களங்கமா? தேசியக்கொடி களங்கம் என்றால் முதல்வரே சொல்லுங்க...களங்கமான தேசியக்கொடியைத் தான் ஆகஸ்ட் 15இல் ஏற்றப் போகிறீர்களா?'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனால் தேசியக்கொடியை அவமரியாதை செய்ததாக எஸ்.வி. சேகருக்கு எதிராக ராஜரத்தினம் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது சைபர் கிரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னையில் எம்எல்ஏ எம்பி க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ். வி. சேகர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தேசியக்கொடிக்கு எப்போதும் நான் மரியாதை செலுத்துபவன். அரசியல் உள்நோக்கத்துடன் இந்த புகார் அளிக்கப் பட்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார். மேலும் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டதோடு, இது குறித்த விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து தள்ளி வைத்தார்.

 

Tags :

Share via