என்ஜினீயரிங் கல்லூரி: முதலாம் ஆண்டு வகுப்புகள் 25–ந் தேதி துவக்கம் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் வரும் 25 ந் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
இதுவரை நடந்த இரண்டு கவுன்சிலிங்கில் மொத்தம் 31 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் என்று அமைச்சர் கூறினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங்கின் முதல் சுற்றில் 185 வரை மதிப்பெண்கள் எடுத்த 10 ஆயிரத்து 148 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 7532 மாணவர்கள் சேர்ந்திருந்தனர். இரண்டாவது சுற்றில் 174 மதிப்பெண்கள் வரை எடுத்த 20 ஆயிரத்து 438 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 13 ஆயிரத்து 415 மாணவர்கள் சேர்ந்திருந்தனர்.
இந்த இரண்டு சுற்றுகளையும் சேர்த்து இதுவரை மொத்தம் சுமார் 31 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 3 மற்றும் 4வது சுற்றுகள் நடைபெற உள்ளன. இந்த சுற்றுகளில் 160, 77.5 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாக இருக்காது. அனைத்து இடங்களும் நிரப்பப்படும்.பொறியியல் மற்றும் பயோ டெக்னாலஜி படிப்புகளில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை. 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மேலும் பொறியியல், பயோ டெக்னாலஜி படிப்புகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத உள்ளார். இந்தக் கடிதத்திற்கு பதில் அளிப்பார் எனவும் மத்திய அரசு நிதி வழங்கும் எனவும் எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி படிப்புக்கான 45 இடங்கள் இருக்கின்றன. இதற்கான தேர்வு நடைபெற்றுள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே நடைபெறும்.
பொறியியல் கல்லூரிகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் இதுவரை 5 ஆயிரத்து 970 பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் சில கவுன்சிலிங் சுற்றுகள் நடைபெற உள்ளதால் மேலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் கட்டண சலுகை கொடுக்கப்படும் என் முதலமைச்சர் அறிவித்திருந்தார். கல்லூரிகளில் மட்டும் அல்லாமல் விடுதிகளில் இருந்து படிக்கும் இந்த மாணவர்களுக்கான செலவையும் அரசே ஏற்கும்.என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் 25 ந் தேதி துவங்கும்.இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
Tags :