கோவில்கள், புராதன சின்னங்களை  பாதுகாக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

by Editor / 10-06-2021 07:33:49pm
கோவில்கள், புராதன சின்னங்களை  பாதுகாக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

 

 கோவில் நிலங்களை,  புராதன சின்னங்களை பாதுகாக்க நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த சிறப்பு அமர்வில் பல்வேறு பிரச்னைகள் எழுப்பப்பட்டன. அவற்றை பரிசீலித்து, 222 பக்கங்கள் அடங்கிய உத்தரவை, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ளது.
உத்தரவு விபரம் வருமாறு:
கோவில்கள், சிலைகள், புராதன சின்னங்கள், ஓவியங்கள், பழமைவாய்ந்த பொருட்களை பாதுகாக்க வேண்டும்l நினைவு சின்னங்கள் அனைத்தையும் பாதுகாக்க, மாமல்லபுரம் உலக புராதன பகுதி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, எட்டு வாரங்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
அரசுக்கும், மாமல்லபுரம் மேலாண்மை ஆணையத்துக்கும் ஆலோசனை வழங்கும் அமைப்பாக, எட்டு வாரங்களில், 17 உறுப்பினர்கள் அடங்கிய புராதன குழுவை, அரசு அமைக்க வேண்டும் அந்தக் குழுவில், இந்திய, மாநில தொல்லியல் துறை பிரதிநிதிகள், வரலாற்று அறிஞர், பொதுப்பணித் துறை பிரதிநிதிகள், இணை கமிஷனர் அந்தஸ்துக்கு குறையாத அறநிலையத் துறை அதிகாரி, தகுதியான ஸ்தபதி, ஆகம, சில்ப சாஸ்திர நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம் பெற வேண்டும். 'யுனெஸ்கோ' பிரதிநிதியையும் சேர்க்க பரிசீலிக்கலாம்.
தொல்லியல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்புகள், கோவில்கள், நினைவு சின்னங்கள், பழமை வாய்ந்த பொருட்களை, இந்த புராதன குழு கண்டறிந்து, அவற்றை பட்டியலிட்டு வகைப்படுத்த வேண்டும். இவற்றை பராமரிக்க, பாதுகாக்க, அவ்வப்போது அரசுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
குழுவின் ஒப்புதல் இல்லாமல், மத்திய - மாநில சட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட நினைவு சின்னங்கள், கோவில்கள், சிலைகள், சிற்பங்கள் மற்றும் சுவர் சித்திரங்களில் எந்த மாற்றமும், சரிபார்க்கும் பணியும் மேற்கொள்ளக் கூடாது. நிபுணர் குழு, கட்டமைப்பு, தொல்லியல் நிபுணர், ஸ்தபதி, வரலாற்று நிபுணர், ஆகம நிபுணர்கள், அறநிலையத் துறை, பொதுப்பணித் துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அடங்கிய, மாநில அளவிலான நிபுணர் குழுவையும், மாவட்ட அளவிலான நிபுணர் குழுவையும் அரசு ஏற்படுத்த வேண்டும்.
மாவட்ட குழுக்கள் அளிக்கும் பரிந்துரையின்படி, கோவில்கள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் புனரமைப்பு பணிகளுக்கு, மாநில நிபுணர் குழு ஒப்புதல் வழங்க வேண்டும்.
மாவட்ட அளவிலான குழுக்களை எட்டு வாரங்களில் அரசு அமைக்க வேண்டும்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள கோவில்களை பார்வையிட்டு, மாநில சட்டத்தின் கீழ் வர வேண்டிய கோவில்கள், சிற்பங்களை கண்டறிந்து, உடனடியாக செப்பனிட வேண்டியது குறித்து அறிக்கை தயாரித்து, அரசின் நடவடிக்கைக்கு மாவட்ட குழு அனுப்ப வேண்டும்l மாதம் ஒரு முறையாவது இந்தக் குழு கூட வேண்டும். அவ்வப்போது கோவில்கள், நினைவு சின்னங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

புராதன குழுவானது, மாமல்லபுரம் உலக புராதன பகுதி மேலாண்மை ஆணையத்தின் பணிகள் குறித்த விதிமுறைகளை வகுக்க வேண்டும்.பாரம்பரிய கோவில்கள், பாரம்பரியம் அல்லாத கோவில்கள், நினைவு சின்னங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க, புனரமைப்பதற்கான நடைமுறைகள் அடங்கிய கையேட்டை, 12 வாரங்களில் அரசு இறுதி செய்ய வேண்டும்.
தொல்லியல் துறை, 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கோவில்களை ஆய்வு செய்து, அதன் சேதத்தை மதிப்பிட வேண்டும். பொது மக்களின் பரிசீலனைக்காக, தொல்லியல் துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். பொதுமக்களும், தங்கள் பகுதியில் உள்ள வரலாற்று நினைவு சின்னங்கள், கோவில்கள் பற்றி தகவல் தெரிவிக்க, பொதுவான இணையதளத்தை தொல்லியல் துறை உருவாக்க வேண்டும்.
கட்டடக்கலை மதிப்பு, வரலாற்று முக்கியத்துவம், எத்தனை ஆண்டுகள் பழமையானது என, கோவில்களை, தொல்லியல் துறை உதவியுடன் அறநிலையத்துறை வகைப்படுத்தலாம்.
கோவில்களின் சுவர் ஓவியங்கள், சுவர் மற்றும் கல்லில் உள்ள குறிப்புகள், மரத்தினாலான வேலைப்பாடுகள், பழமையான பாத்திரங்களை பாதுகாக்க வேண்டும்; முறையாக பராமரிக்க வேண்டும்.
பழமைவாய்ந்த சேதமான பொருட்களின் மதிப்பை, மத்திய தணிக்கை துறை, தணிக்கை செய்ய வேண்டும்.
அறநிலையத் துறையில், கூடுதல் அல்லது இணை கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கோவில் மற்றும் அதன் சொத்துக்கள் தொடர்பான பிரச்னைகளை கவனிக்க வேண்டும்.
தொல்லியல் துறை ஆய்வு செய்து, 100 ஆண்டுகளுக்கு மேலான கோவில்கள் அனைத்தையும், அதில் ஒரு சிலை இருந்தால் கூட, அவற்றையும் நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும்.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் நினைவு சின்னங்கள், கோவில்கள், சிலைகள், சிற்பங்கள், சுவர் ஓவியங்களில், மாநில அளவிலான அல்லது மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதல் இல்லாமல், கட்டுமானங்களில் மாற்றமோ, சரிபார்க்கும் பணியோ மேற்கொள்ளக் கூடாது. இந்தக் குழுவின் ஒப்புதல் பெற்ற பின், நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக தொடரலாம்.
புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது, அசல் கட்டுமானத்துக்கு பாதகமாக, சிமென்ட், வெள்ளை பூச்சு செய்யப்பட்டிருந்த கோவில்களை, மாவட்ட குழுக்கள் கண்டறிந்து, மாநில குழு அல்லது புராதன குழுவுக்கு தெரிவிக்க வேண்டும். அதனால், அதன் பழைய தன்மையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். 
புனரமைப்பு குழுவில் உள்ளவர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.புராதன கோவில்கள், அவற்றின் சொத்துக்களை பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும், அறிவியல் தொழில்நுட்பத்தை அறநிலையத் துறை கையாள வேண்டும்.
கோவில் நிதியை, முதலில் கோவில் பராமரிப்பு, விழாக்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசை கலைஞர்கள் என, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பயன்படுத்த வேண்டும். உபரி தொகை இருந்தால், மற்ற கோவில்களின் பராமரிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
பழமையான நினைவு சின்னங்களை பாதுகாக்கவும், புராதன குழு மற்றும் மாநில, மாவட்ட குழுக்கள் இயங்கவும், மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய உரிய நடைமுறைகளை, அறநிலையத்துறை வகுக்க வேண்டும்l குழுக்கள் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில், மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஆர்வம் உடையவர்கள் பங்கேற்க, அறநிலையத் துறை அனுமதிக்கலாம். மத நிறுவனங்களின் தணிக்கையை, சுதந்திரமான தணிக்கை பிரிவு வாயிலாக மேற்கொள்ள வேண்டும். இதை, அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும்.நன்கொடையாளர்களிடம் பெறப்பட்ட நிதியை, கணக்கில் எடுத்து வந்து, அறநிலையத் துறை பராமரிக்கும் ஆவணங்களில் பதிய வேண்டும். கோவில் நகைகள், பொருட்களின் பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும். திருடு போன, காணாமல் போன பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, அந்தந்த மாவட்ட குழுக்கள் கணக்கெடுக்க வேண்டும். சர்வே எண்; காலியிடமா; குத்தகைக்கு விடப்பட்டதா; விவசாய நிலமா; வாடகை விபரங்களை எடுக்க வேண்டும். தனி நபர், நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டதா; வாடகை செலுத்த தவறியது; நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு; ஆக்கிரமிப்பு; எடுக்கப்பட்ட நடவடிக்கை; சட்டவிரோத நில விற்பனைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என, அனைத்து விபரங்களையும் ஆவணப்படுத்த வேண்டும்l இது குறித்த அறிக்கையை, 12 வாரங்களில், இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
கோவில் நிலங்களுக்கு, அரசு அல்லது அறநிலையத் துறை கமிஷனர் தான் அறங்காவலர். தானம் வழங்கியவர்களின் விருப்பத்துக்கு மாறாக, இந்த நிலங்களை விற்கவோ, கொடுக்கவோ கூடாது. கோவில் வசம் தான், இந்த நிலங்கள் எப்போதும் இருக்க வேண்டும். கோவில் நிலங்களைப் பொறுத்தவரை, பொது நோக்கம் என்ற அம்சத்தை எடுத்து வரக்கூடாது.
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத கட்டுமானங்களை உடனடியாக அகற்ற வேண்டும். வருவாய் துறை உதவியுடன், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காண வேண்டும்l சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற, உடனடியாக கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவகாசம் வழங்கி, எட்டு வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை ஆறு வாரங்களில் தயாரித்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும். அவர்களை வெளியேற்றவும், பாக்கியை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்களில் உள்ள சிலைகளை கணக்கெடுக்க வேண்டும். அவற்றை புகைப்படங்கள் எடுக்க வேண்டும். திருடப்பட்ட சிலைகள், பொருட்களின் விபரங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும். காணாமல் போன மூலவர் சிலைகள், சொத்து பதிவேடுகளை மீட்க, அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கோவிலிலும் ஓதுவார்கள், பட்டர்கள், இசை கலைஞர்களை போதுமான எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும். தகுதியான அர்ச்சகர்களையும், ஸ்தபதிகளையும் நியமிக்க வேண்டும். அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் அனைவருக்குமான ஊதியத்தை, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி நிர்ணயிக்க வேண்டும். அரசு ஊழியருக்கு இணையாக இருக்க வேண்டும்.
சிறப்பு தீர்ப்பாயம்: மத நடவடிக்கைகள், பாரம்பரிய வழக்கம், வாடகை நிலுவை, குத்தகை, ஆக்கிரமிப்பு, நிலப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு தீர்ப்பாயம் ஏற்படுத்த வேண்டும். பணியில் இருக்கும் மாவட்ட நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் இந்த தீர்ப்பாயம் இயங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via