கொலை வழக்கில் தேடப்பட்ட  கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ்   கோர்ட்டில் சரண்; சிறையில் அடைப்பு

by Editor / 11-10-2021 03:44:53pm
கொலை வழக்கில் தேடப்பட்ட  கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ்   கோர்ட்டில் சரண்; சிறையில் அடைப்பு

பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த தி.மு.க. எம்.பி. ரமேஷ்  பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு (60). இவர் பனிக்குப்பத்தில் கடலூர் தி.மு.க. எம்.பி.ரமேஷின், முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். கடந்த செப்டம்பர் 19ந்தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி., கோமதி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.


இதுதொடர்பாக ரமேஷ் எம்.பி. அவரது உதவியாளர் பண்ருட்டியைச் சேர்ந்த நடராஜ், சக தொழிலாளிகள் அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் 302 (கொலை), 201 (தடயம் மறைப்பது), 149 (சதித்திட்டம்), 120பி (கூட்டு சதித்திட்டம்) 147 (5 பேருக்கு மேல் கூட்டாக சேர்ந்து தாக்குதல்), 148 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 8-ம் தேதி நடராஜ், கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், சுந்தர் ஆகிய 5 பேரை கொலை வழக்கில் கைது செய்த போலீசார், கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.


இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள எம்.பி. ரமேஷை தேடும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் பண்ருட்டி நீதிமன்றத்தில் முதலாவது மாஜிஸ்திரேட் கற்பகவள்ளி முன்பு இன்று ரமேஷ் சரணடைந்தார்.

 

Tags :

Share via