மசினகுடியில் சிசிடிவி கேமராவில்  புலி

by Editor / 12-10-2021 04:06:24pm
மசினகுடியில் சிசிடிவி கேமராவில்  புலி


நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் 4 பேரைத் தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலி சிசிடிவி கேமராவில் புலியின் நடமாட்டம் 8 நாட்களுக்கு பின் தென்பட்டுள்ளதால், அந்த பகுதியில் தேடுதல் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.


நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் எஸ்டேட், மசினகுடி உள்பட்ட பகுதிகளில் 4 பேரையும், 30க்கும் மேற்பட்ட மாடுகளையும் கொன்ற புலியை தமிழக மற்றும் கேரள வனத் துறையினர், அதிரடிப்படையினர் இணைந்து பல குழுக்களாகப் பிரிந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த 25ம் தேதி முதல் மயக்க ஊசிபூசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


புலி அடிக்கடி இடத்தை மாற்றியதால் வனத் துறையினரால் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியவில்லை. இறுதியாக முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் நுழைந்த புலி அங்கிருந்தும் மசினகுடி, சிங்காரா வனப் பகுதிகளுக்குள் நுழைந்து பதுங்கியது. அதன் பிறகு மசினகுடியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் புலியை கண்காணித்தனர். கடந்த 7 நாட்களாக புலி நேரடியாகவோ, தானியங்கி (சிசிடிவி) கேமராவிலும் தென்படவில்லை. இதனால், ‘புலி எங்கு சென்றது ; என்ன ஆனது’ என, தெரியாமல் வனத்துறையினர் கவலையுடன் புலியை தேடி வந்தனர்.


இந்த நிலையில் செவ்வாய் அதிகாலை ஓம்பெட்டா வனப்பகுதியில் வனத்துறையினர் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. இதனால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதைத் தொடர்ந்து புலியை பிடிப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புலி ஏற்கனவே வந்து சென்ற, கூடலூரை ஒட்டிய ஸ்ரீமதுரை ஊராட்சி, தேவன் எஸ்டேட், மேல் பீல்டு பகுதிக்கு வரலாம் என்று கணித்துள்ள வனத்துறையினர், போஸ்பர பகுதியில் முகாமிட்டுள்ளனர். மக்களையும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி வருகின்றனர்.


நீலகிரியில் மனிதர்கள், கால்நடைகளைத் தாக்கி வந்த டி 23 எனப் பெயரிடப்பட்ட புலியின் ரோமம், எச்சம் உள்ளிட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஐதராபாதில் உள்ள மத்திய உயிரியல் செல்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலைமை வன உயிரின காப்பாளர் சேகர்குமாா் நீரஜ் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via