நண்பர்களுடன் ஏரியில் நீச்சல் போட்டி... நீரில் மூழ்கி மாணவர் உயிரிழந்த பரிதாபம்...
ஓமலூர் அருகே நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் நீச்சல் பந்தயத்தில் கலந்து கொண்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் மூச்சுத்திணறி ஏரியில் மூழ்கி பலி.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுக்கா கே.எண். புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார். வயது 45. இவர் ட்ரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகிறார். இவருடைய ஒரே மகன் ஈஸ்வரன். வயது 17. தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் நேற்று ஆயுத பூஜையை விடுமுறை என்பதால் வீட்டின் அருகே உள்ள ஏரிக்கு நண்பர்கள் சிலருடன் குளிக்க சென்றுள்ளான். அங்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஏரியின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு யார் முதலில் சென்று வருவது என பந்தயம் வைத்து போட்டி நடத்தியுள்ளனர்.
இதில் கலந்து கொண்ட மாணவன் ஈஸ்வரன் ஏரியின் பாதி தூரம் சென்றதும் மூச்சு திணறல் ஏற்பட்டு ஏரியில் மூழ்க ஆரம்பித்துள்ளான். இதனைத் கண்ட அவனது நண்பர்கள் நீரில் மூழ்கி தேட ஆரம்பித்துள்ளனர். ஆனால் அவர்களால் நண்பனை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக காடையாம்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவனை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் பற்றி தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாணவனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளரின் ஒரே மகன் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :