அடுத்தடுத்து சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னால் யார் யார் வீட்டில் சோதனை நடந்துள்ளது என பார்க்கலாம்.
முதலில் சிக்கியவர் போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவர் வருமானத்துக்கு 55 சதவீதத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ரூ.2.51 கோடியாக இருந்த சொத்து, 2021ல் ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகள், அலுவலகங்கள், அவருக்கு தொடர்புடைய இடங்கள் என 20 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.25.56 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவன முதலீடுகள், நிறுவனங்களில் செலுத்தப்பட்ட, பெறப்பட்ட பண பரிவர்த்தனைகள் போன்ற முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அடுத்தபடியாக கடந்த ஆகஸ்டு மாதம், எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தசமயத்தில் சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீடு, அலுவலகம் என கோவையிலும், சென்னையிலும் 60 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் ரூ.13,08,500 பணம், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், ரூ.2 கோடி வைப்புத் தொகை, மாநகராட்சி தொடர்பான அலுவல் ஆவணங்கள், ஹார்ட் டிஸ்டுகள், முக்கியமான லாக்கர் சாவி ஒன்றும், வங்கிக் கணக்கு குறித்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அடுத்ததாக கடந்த செப்டம்பர் மாதம் அதிமுகவை சேர்ந்த வணிகவரித்துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. ரூ.28.78 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக 654 மடங்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக அவர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இவரின் சொத்து மதிப்பு 7 கோடி ரூபாயில் இருந்து 76.65 கோடி ரூபாய் வரை உயர்ந்து இருக்கிறது. இதையடுத்து அவருக்கு தொடர்புடைய 35 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை.
தற்போது சிக்கியவர் சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர்சி.விஜயபாஸ்கர்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் அமைச்சராக இருந்த போது மனைவி மற்றும் மகள்கள் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்ததாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து இவர் மீதும் இவர் மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இந்த சோதனையை தொடங்கி உள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Tags :