உத்தரப்பிரதேசம் குஷிநகரில் ரூ.260 கோடியில் விமான நிலையம்: மோடி திறந்து வைத்தார்

by Editor / 20-10-2021 04:32:04pm
உத்தரப்பிரதேசம் குஷிநகரில் ரூ.260 கோடியில்  விமான நிலையம்: மோடி திறந்து வைத்தார்

உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த விமான நிலையத்திற்கு முதலாவதாக இலங்கையில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியது. அதில், அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே மகனும், இலங்கை விளையாட்டு துறை அமைச்சருமான நமல் ராஜபக்சே தலைமையில் புத்த மத துறவிகள் வந்தனர். அமைச்சரை, வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் வரவேற்றார்.


குஷிநகர் சர்வதேச விமான நிலையம் ரூ.260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. புத்தர் முக்தி அடைந்த இடத்தை பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாக இந்த விமான நிலையம் அமையும். மேலும், உலகம் எங்கும் உள்ள புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும். இந்த விமான நிலையம், உத்தரப்பிரதேச மாநிலத்தின் 3 வது மிகப்பெரிய விமான நிலையமாக மாறியுள்ளது.


இந்த விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் கவர்னர் ஆனந்திபென், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜ்ஜூ, ஜோதிராதித்யா சிந்தியா, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விமான நிலையத்தை திறந்து வைத்த பின்னர் மோடி பேசியதாவது:


பல ஆண்டுகளின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு விடையாக குஷிநகர் விமான நிலையம் அமைந்துள்ளது. எனது மகிழ்ச்சி இரு மடங்கு அதிகரித்து உள்ளது. ஆன்மிக பயணத்தில் ஆர்வமாக இருக்கும் எனக்கு, இன்றைய நாள் திருப்தி அளிக்கிறது.
பூர்வாஞ்சல் பகுதி பிரதிநிதியாக, எங்கள் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான நேரம் வந்துள்ளது. புத்த கொள்கையில் மையமாக இந்தியா திகழ்கிறது. இந்த விமான நிலையத்தை புத்தருக்காக அர்ப்பணிக்கிறோம். குஷிநகர் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்தோம். ஜீவர் நகர் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.


இந்தியாவில் 200 ஹெலிபோர்ட்கள் மற்றும் விமான நிலையங்களை இணைக்க திட்டமிட்டுள்ளோம். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக இந்தியா திகழ்கிறது. இந்த விமான நிலையமானது, வான் வெளியை இணைக்கும் நிலையமாக மட்டும் செயல்படாது. விவசாயிகள், விலங்குகளை வளர்ப்பவர்கள், கடை வைத்திருப்பவர்கள், தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலதிபர்கள் என அனைவருக்கும் பயன்தரும். தொழிலுக்கு உகந்த சுழலை ஏற்படுத்தும். இப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதுடன், சுற்றுலா துறைக்கு அதிக பலனை ஏற்படுத்தி கொடுக்கும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே நிருபர்களிடம், குஷிநகரில் இலங்கை விமானத்தை முதலவதாக தரையிறங்க அனுமதித்து பிரதமர் மோடி பெருமை அளித்துள்ளார். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று புத்த மதம் ஆகும் என்றார் .

 

Tags :

Share via