பிற்படுத்தப்பட்டோர் நலன் புதிய அறிவிப்புகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை

by Editor / 23-10-2021 03:44:45pm
பிற்படுத்தப்பட்டோர் நலன் புதிய அறிவிப்புகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சட்டசபையில் 2021 22ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.


மேலும், துறையின் திட்ட செயல்பாடு, கள்ளர் சீரமைப்பு பள்ளி,விடுதிகள் (ம) இத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரி, பள்ளி விடுதிகளின் நிர்வாகம், 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம், ஏழை, எளிய வகுப்பை சேர்ந்த மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை வழங்கும் திட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பை சேர்ந்த மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் இலவச சலவைப்பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், வீடற்ற ஏழை, எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வகுப்பை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம், நரிக்குறவர் நல வாரியம், சீர்மரபினர் நல வாரியம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக இணை இயக்குநர், கள்ளர் சீரமைப்பு மற்றும் மாவட்ட அலுவலர்களிடம் கலந்தாலோசித்தார்.


இத்திட்டங்களை எவ்வித தொய்வும் ஏற்படாத வண்ணம் செயல்படுத்திடுமாறும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விடுதிகளை பராமரிக்கதக்க முன்னேற்பாடுகள் மற்றும் தூய்மை பணிகளை விரைவில் முடித்து மாணாக்கர்கள் தங்கும் வகையில் உகந்த சூழலை உருவாக்குமாறும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

 

Tags :

Share via