மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

by Editor / 24-10-2021 07:04:30pm
மேட்டூர் அணை நீர்மட்டம்  100 அடியை எட்டியது

தமிழகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்துக் காணப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 13,477 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 39,634 கன அடியாக அதிகரித்தது. தற்பொழுது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்தது, இதனால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 28,650 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று முன்தினம் காலை 95.10அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 11 மணியளவில் 100 அடியாக உயர்ந்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த மார்ச் 27- ம் தேதி 100 அடியை எட்டிய நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பின்னர் தற்பொழுது மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர் இருப்பு 64.42 டி.எம்.சி- யாக இருந்தது.

மேட்டூர் அணையின் 88 ஆண்டு வரலாற்றில் 77-வது ஆண்டாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்திருக்கிறது.

 

Tags :

Share via