மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.

by Editor / 03-11-2021 01:39:10pm
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.

பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை காரணமாக பாலாற்று படுகையில் வெள்ளப்பெருக்கு -  ஆஞ்சநேயர் கோயில்  வெள்ளத்தில் சிக்கிய இருவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
 
பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழியாறு, பாலாறு ஆற்றுப்படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு முழுவதும் பாலாற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் நீரில் மூழ்கியது. கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால், கோயிலுக்குள் இருந்த இரவுக் காவலர்கள் மகாலிங்கம் மற்றும் திருமலைசாமி ஆகிய இருவர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி இருவரையும் கயிறுகட்டி பாதுகாப்பாக மீட்டனர்.
 
தொடர் மழை காரணமாக ஆழியாறு மற்றும் பாலாறு ஆற்றுப்படுகைகளில், காட்டாற்று வெள்ளம் வருவதால், ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், பொதுமக்கள் ஆற்றில்  குளிப்பதும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் சிக்கி தவித்த இருவரையும் பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via