ஆன்லைன் மூலம் ரூ.100 கோடி மோசடி

by Editor / 09-11-2021 03:39:18pm
 ஆன்லைன் மூலம் ரூ.100 கோடி மோசடி

நவீன முறையில் ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலத்தில் கிரிப்டோ கரன்சி என்ற டிஜிட்டல் பணத்தின் பேரில் மோசடி நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதன் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் ஒரு கும்பல் பொதுமக்களிடம் அதிக அளவில் பணத்தை பெற்று இரட்டிப்பாக தருவதாக மோசடியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி கண்ணூர் பகுதியை சேர்ந்த இளம் தொழில் அதிபர் ஒருவர் புகார் தெரிவித்தார். இதன்பேரில் கண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நவீன முறையில் ஆன்லைன் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்ணூர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், சபீக், வாசிம் முனாவரலி மற்றும் முகமது சபீக் ஆகியோர் என தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் ஏராளமானோரிடம் அதிக பணம் பெற்று கிரிப்டோ கரன்சியாக திருப்பி தருவதாக கூறி ரூ.100 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதற்காக தனியாக நிறுவனம் நடத்தி அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்திற்கு பதிலாக கிரிப்டோ கரன்சி என்னும் டிஜிட்டல் பணம் திருப்பி தருவதாக கூறி ஏமாற்றி உள்ளனர். மேலும் அவர்கள் பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via