ரூ.1 கோடி தொகைக்காக இறந்ததாக நடித்தவர் கைது

by Editor / 09-11-2021 03:48:12pm
ரூ.1 கோடி தொகைக்காக இறந்ததாக நடித்தவர் கைது

ஹனீப்பின் மகன் இக்பால், ஹனீப் இறந்துவிட்டதாக ஷகீர் மன்சூரி என்ற யுனானி டாக்டர் கையெழுத்திட்ட ஆவணங்களைப் பெற்று, நகராட்சியில் மரண சான்றிதழ் பெற்றார்.

மத்தியபிரதேச மாநிலம் தேவாஸ் நகரைச் சேர்ந்தவர் அப்துல் ஹனீப் (வயது 46). இவர் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் ஆன்லைன் வாயிலாக ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு பெற்றார்.

 அதற்கான 2 மாதாந்திர தவணைகளை செலுத்தினார். இந்நிலையில் ஹனீப்பின் மகன் இக்பால், ஹனீப் இறந்துவிட்டதாக ஷகீர் மன்சூரி என்ற யுனானி டாக்டர் கையெழுத்திட்ட ஆவணங்களைப் பெற்று, நகராட்சியில் மரண சான்றிதழ் பெற்றார்.

பின்னர் அதைக் கொண்டு, ரூ.1 கோடி காப்பீட்டு தொகை பெறுவதற்கு ஹனீப்பின் மனைவி ரெகானா விண்ணப்பித்தார்.

ஆனால் சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசோதித்தனர். அப்போது அவை போலியானவை என தெரியவந்ததை அடுத்து, கடந்த ஆண்டு தொடக்கத்தில் போலீசில் புகார் செய்தனர்.

அதன்படி விசாரணை நடத்தி வந்த போலீசார், ஹனீப் உயிருடன் இருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்தனர்.

அதைத் தொடர்ந்து, அப்துல் ஹனீப்பையும், அவர் இறந்துவிட்டதாக ஆவணங்கள் வழங்கிய யுனானி டாக்டர் ஷகீர் மன்சூரியையும் கைது செய்தனர்.

தலைமறைவாகிவிட்ட ஹனீப்பின் மனைவியையும், மகனையும் தேடி வருகின்றனர்.
இந்த 4 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via