குமரி மாவட்டத்தில் 24 மணி நேரமும் மழை

by Editor / 09-11-2021 05:45:54pm
குமரி மாவட்டத்தில்  24 மணி நேரமும் மழை

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

தென்கிழக்கு வங்கக்கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே விட்டு விட்டு மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி வந்த மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு பள்ளிக்கு வந்தனர்.

ஆரல்வாய்மொழி, கோழிபோர்விளை, குருந்தன்கோடு, கொட்டாரம், மயிலாடி, குளச்சல், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. சிற்றார்-2 அதிகபட்சமாக 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றார்-1, சிற்றார்-2, மாம்பழத்துறையாறு அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

5 அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதை அடுத்து குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அங்குள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

இதனால் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். மலையோர பகுதியான குற்றியாறு, கிழவியாறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழையின் காரணமாக கோதையாறு, வள்ளியாறு, பழையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.03 அடியாக இருந்தது. அணைக்கு 1468 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 646 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.08 அடியாக உள்ளது. அணைக்கு 849 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 800 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

சிற்றார்-1 அணை நீர்மட்டம் 16.10 அடியாக உள்ளது. அணைக்கு 263 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 272 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-2 அணை நீர்மட்டம் 16.20 அடியாக உள்ளது. அணைக்கு 210 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 224 கன அடிஉபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

பொய்கை மற்றும் மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. அணைகளுக்கு வரக்கூடிய தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 13 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 5 வீடுகளும், கல்குளத்தில் ஒரு வீடும் விளவங்கோட்டில் 5 வீடுகளும், கிள்ளியூரில் 2 வீடுகளும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மழை சேதங்கள் குறித்த தகவலை தெரிவிக்க நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

மழையின் காரணமாக நாகர்கோவில் நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. கோட்டார் சாலை, செட்டிகுளம் சாலை உட்பட பல்வேறு சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

Tags :

Share via