கன்னியாகுமரியில் ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

by Admin / 13-11-2021 06:14:26pm
கன்னியாகுமரியில் ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

 தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை காரணமாக பல கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் திருநெல்வேலிக்கு மாற்றுப்பாதையில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இயக்கப்பட்டன.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை காரணமாக, குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறு, பழையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பூதப்பாண்டி அருகே தெரிசனங்கோப்பு பகுதியில் சாலையை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இறச்சகுளம் பகுதியிலிருந்து கீரிப்பாறை செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தெரிசனங்கோப்பு, பூதப்பாண்டி, தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர் மழைக்கு 120-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. செங்கல் சூளைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

குமரி மாவட்டம் முழுவதும் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், திருநெல்வேலிக்கு மாற்றுப்பாதையில் பஸ்கள் மற்றும் வாகனங்கள் இயக்கப்பட்டன. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் அருகிலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்கள் ஒழுகினசேரி பாலம் அருகிலும் நிறுத்தப்பட்டன. இதனால் ஏராளமான வாகனங்கள் அங்குமிங்கும் செல்ல முடியாதபடி நின்றன.

 நெல்லைக்கும், நெல்லை மார்க்கமாக செல்லக்கூடிய அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கார், லாரி, வேன் போன்ற வாகனங்கள் அனைத்தும் நாகர்கோவிலில் இருந்து மயிலாடி, அஞ்சுகிராமம், காவல்கிணறு வழித்தடத்தில் இயக்கப்பட்டன. இதன் காரணமாக நாகர்கோவில் கேப்ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 சாலைகள் குண்டும், குழியுமாக கிடந்ததாலும், அதிகளவு வாகன போக்குவரத்து இருந்ததாலும், கோட்டார் சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதனால் பேருந்துகளில் சென்ற பயணிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள். இதனிடையே, தடிகாரன்கோணம் தொட்டிபாலம் நிறைந்து தண்ணீர் வெளியே சாடி வருகிறது.

 

Tags :

Share via