தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் 91 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது

by Editor / 15-11-2021 04:50:36pm
தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் 91 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது

 

வடகிழக்கு பருவமழை தொடரும்பட்சத்தில் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு மேலும் உயரும் என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு விவரத்தினை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்கள் சராசரியாக 91.14 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களான பூண்டி நீர்தேக்கம் 88.33 சதவீதம், சோழவரம் ஏரி 73.73 சதவீதம், புழல் ஏரி 86.24 சதவீதம், செம்பரம்பாக்கம் 81.98 சதவீதம், தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் 100 சதவீதம் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வறட்டாறு, ஆண்டியப்பனூர் ஓடை, மோர்த்தனா, குண்டாறு, அடவிநைனார்கோவில், பொய்கையாறு, மாம்பழத்துறையாறு, சாத்தையாறு, சோத்துப்பாறை, சாஸ்தா கோவில், சோலையாறு, வர்தமாநதி, குண்டேரி பள்ளம், வரட்டுப்பள்ளம், கரியகோயில் ஆகிய நீர்த்தேக்கங்கள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 5-ந்தேதி நிலவரப்படி 84 சதவீதம் கொள்ளளவை எட்டிய நீர்த்தேக்கங்கள் தற்போது 91.14 சதவீதம் நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடரும்பட்சத்தில் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு மேலும் உயரும் என்றும் நீர்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via