ரூ.30 ஆயிரம் இழந்த பள்ளி மாணவன் மரணம்
வீடியோ கேம்ஸ் விளையாட்டில் பணத்தை இழந்த சிறுவன் மர்மமான முறையில் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே கோரம்பிசேரி பொக்கரம்பரம்பி பகுதியை சேர்ந்தவர் சபி. இவரது மகன் ஆகாஷ்(வயது14). அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். ஆகாஷ் அடிக்கடி தனது தந்தையின் ஸ்மார்ட் போன் மூலம் வீடியோ கேம் விளையாட்டில் பணம் கட்டி விளையாடி வந்தார்.
இதற்காக தனது தந்தையின் செல்போன் மூலம் ரூ.30 ஆயிரம் பணம் செலுத்தி விளையாடி உள்ளார். வீடியோ கேமில் அந்த பணத்தை இழந்து விட்டார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்து திடீர் என மாயமானார்.
இது குறித்து திருச்சூர் போலீசில் தந்தை சபி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து மாயமான சிறுவன் ஆகாஷ் இரிஞ்ஞாலக்குடா அருகே கூடல்மாணிக்கம் பகுதியில் கோவில் குளத்தின் அருகே பிணமாக கிடந்தான்.
அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனின் மரணத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோ கேம்ஸ் விளையாட்டில் பணத்தை இழந்த சிறுவன் மர்மமான முறையில் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதே போல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருச்சூர் அருகே சட்டுவா பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அமல்கிருஷ்ணா வீடியோ கேம் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags :