ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை திருடன் சிக்கினான்

by Admin / 19-12-2021 04:29:37pm
ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை திருடன் சிக்கினான்

வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் சுவரில் துளைபோட்டு கொள்ளை கும்பல் நகைகளை திருடிச் சென்றனர். 16 கிலோ தங்க நகைகள், அரை கிலோ வைர நகைகள் திருடுபோனது. இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடையின் உள்ளே புகுந்த மர்மநபர் பெயிண்ட் ஸ்பிரே அடித்து கண்காணிப்பு கேமராக்களை மறைத்து பின்னர் நகைகளை கொள்ளை அடித்து சென்றான்.

இதுதொடர்பாக வெளியாகிய கண்காணிப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், மர்மநபர் சிங்க படம் கொண்ட முகமுடி மற்றும் தலையில் விக் அணிந்து உள்ளே வருவதும், ஒவ்வொரு கண்காணிப்பு கேமராக்களையும் பெயிண்ட் ஸ்பிரே மூலம் மறைப்பதும் பதிவாகி இருந்தது. கொள்ளையனை பிடிக்க 4 டி.எஸ்.பி. தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது.

கேமராவில் பதிவான கொள்ளையன் யார்? என்பதை கண்டறிய தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தடைப்படை போலீசார் விசாரித்தனர்.

மேலும் காட்பாடி சாலையில் பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் நகைக்கடையின் முன்பு நீண்டநேரம் ஆட்டோ ஒன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

அந்த ஆட்டோ சம்பந்தமில்லாமல் நள்ளிரவு நேரத்தில் கடையின் முன்பு ஏன் நிற்க வேண்டும் என்ற கேள்வியை அடிப்படையாக கொண்டு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

கொள்ளைபோன நகை கடையின் அருகே காலி இடத்தை ஒட்டியவாறு தங்கும் விடுதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த தங்கும் விடுதியில் கட்டிட பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் கட்டிட தொழிலாளர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கட்டிட தொழிலாளர்கள் 25 பேரின் புகைப்படம்- கைரேகைகள் போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையின் தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் நகை கடையில் கொள்ளையடித்த பள்ளி கொண்டா பகுதியை சேர்ந்த பலே திருடன் சிக்கியுள்ளான். அவனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கொள்ளையடித்த 16 கிலோ தங்கநகைகள், அரை கிலோ வைர நகைகளை  மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகு மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via