சென்னை காவல்துறை விழிப்புணர்வு....மாணவர்களின் நலன் கருதி

by Admin / 22-12-2021 03:35:28pm
சென்னை காவல்துறை விழிப்புணர்வு....மாணவர்களின் நலன் கருதி

பேருந்தில் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகர் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று, மாணவர்களுக்கு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகரிலுள்ள மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், தி.நகர், அடையாறு, புனித தோமையர்மலை, புளியந்தோப்பு, அண்ணாநகர், அம்பத்தூர் ஆகிய 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் அடங்கிய காவல் குழுவினர் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று, விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் சமீபத்தில் பல இடங்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த சம்பவம் நடந்திருந்தது. சில இடங்களில், போக்குவரத்து ஊழியர்கள் மாணவர்களால் தாக்கப்பட்டனரும்கூட. இச்சம்பவங்களெல்லாம் போக்குவரத்து ஊழியர் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சென்னை காவல்துறை பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தினமும் பள்ளிகளுக்கே சென்று சென்னை காவல்துறையினர் மாணவர்கள் மத்தியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

யானைகவுனி பகுதியில் உள்ள ஶ்ரீ முத்துக்குமாரசாமி தேவஸ்தானம் உயர்நிலை பள்ளி மற்றும் மெட்ராஸ் பிராக்ரஸ் யூனியன் உயர்நிலை பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு சென்று யானைகவுனி காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையிலான போலீசார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 
மாணவர்களுக்கு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்து என்பது குறித்தும், போதை பொருட்களுக்கு எதிராகவும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரைகள் வழங்கினர்.

இதைபோல திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்தானது என்பது குறித்தும், போதை பழக்கத்துக்கு ஆளாகமல் பாதுகாப்பது குறித்தும், கொரோனா விழிப்புணர்வு குறித்தும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. பெண்கள் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பெண் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, மாணவிகளுக்கு பல்வேறு பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்வதும், ஓடிச் சென்று ஏறுவது போல சாகசங்கள் செய்வதும் ஆபத்தை விளைவிக்கும் எனவும், இவ்வாறு ஆபத்தான பயணம் மேற்கொள்வதால், விபத்து ஏற்பட்டு, கை, கால் மற்றும் உடல் ஊனம் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படும் என்பது குறித்தும், இந்தியாவின் எதிர்கால தலைமுறையாகிய மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி, முன்னேற வேண்டும் எனவும் காவல் குழுவினரால் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மாணவர்களிடம் காவலர்கள், “மாணவர்களாகிய நீங்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல், நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடித்து, வாழ்வில் முன்னேற்றம் அடைந்து, தம்மையும், தமது குடும்பத்தையும், தமது நாட்டையும் உயர்த்த வேண்டும்” என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. காவல் குழுவினரின் அறிவுரைகளை ஏற்று, பேருந்தில் படியில் பயணம் செய்யாமல், படிப்பில் கவனம் செலுத்தி, நல்ல பழக்கங்களை கடைபிடிப்பதாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via