சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞர்

கோவை சூலூர் அடுத்த செங்கத்துறை பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி என்பவரது மகன் கௌதம். கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பாகப் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கௌதம் அவரை கடத்திச் சென்றுள்ளார். சிறுமி காணாமல் போனதையடுத்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கௌதம், சிறுமியுடன் அன்னூர் பகுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்று அவரை கைது செய்து போலீசார், சிறுமியையும் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் கௌதம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவினாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.
.
Tags :