தேவைப்பட்டால் ஊரடங்கு விதிக்கலாம் - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

by Admin / 27-12-2021 03:22:58pm
தேவைப்பட்டால் ஊரடங்கு விதிக்கலாம் - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188 பிரிவின் கீழ் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 
அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு முறைகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படும். ஒமைக்ரான் பரவாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்த வேண்டும். 

மாநில அரசுகள் போர்க்கால ஆயத்த அறைகளையும், அவசரகால நடவடிக்கை மையங்களையும் ஏற்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188 பிரிவின் கீழ் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம்.

 
 

 

Tags :

Share via