சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 அதிநவீன போர் விமானங்கள்

by Admin / 05-01-2022 11:41:12am
சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 அதிநவீன போர் விமானங்கள்

பொசைடன் 8ஐ’ என்ற ரகத்தை சேர்ந்த 8 விமானங்களை கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து இந்தியா முதல் முறையாக வாங்கியது.

இவை அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2-ம் கட்டமாக வாங்கப்பட்ட 4 விமானங்கள் கோவாவில் உள்ள ஐ.என்.எஸ். ஹான்சாலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 
இவை இந்திய பெருங்கடலில் சீனாவின் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் சீன வீரர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் இந்த வகை விமானங்களை இந்தியா பயன்படுத்தியது. மேலும் கடல் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த 2 டிரோன்களை அமெரிக்காவிடம் இருந்து கடந்த ஆண்டு இந்தியா வாங்கியது.

இந்த நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் வான் ரோந்துப் பணிகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் விமானங்களை இந்தியா சேர்த்துள்ளது.

நீர்மூழ்கி கப்பல்களை கண்டறியும் போர் விமானமும், கடல் பகுதியை வானில் இருந்து உளவு பார்க்கும் ‘பொசைடன் 8ஐ’ அதிநவீன கடல் ரோந்து விமானமும் அமெரிக்காவிடம் இருந்து கடந்த மாதம் 30-ந்தேதி இந்தியா பெற்றது. 

இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தற்போது அவை இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேலும் 30 அதிநவீன டிரோன்களையும் அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இவை சுமார் 35 மணி நேரம் தொடர்ந்து பறந்து கடல் மற்றும் நிலப்பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தவையாகும்.

 

Tags :

Share via