இந்திய ராணுவ தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

by Admin / 15-01-2022 04:46:21pm
 இந்திய ராணுவ தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தினர் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர் 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே கடும் மோதல் மூண்டது.

இரு நாட்டு ராணுவ வீரர்களும் கற்களால் தாக்கி கொண்டனர். இந்த பயங்கர மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து லடாக் எல்லையில் பெரும் பதற்றம் உண்டானது. இதன் பின்பு லடாக் எல்லையில் அமைதி திரும்ப இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதன் காரணமாக சில பதற்றமான பகுதிகளில் கூடுதலாக குவிக்கப்பட்டு இருந்த இரு நாடு படை வீரர்களும், அவர்களின் ராணுவ டாங்கிகளும் விலக்கிக் கொண்டன. இதுவரை 14 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன.

முதலில் நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்த நிலையில் கடைசியாக நடந்த இரண்டு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இரு தரப்பின் நிலையை மாற்றுவதற்கான சீனாவின் ஒருதலைப்பட்ச முயற்சிகளை இந்தியா சுட்டிக்காட்டியது. ஆனால் இந்திய தரப்பின் கோரிக்கையை சீனத் தரப்பு ஏற்கவில்லை. எல்லையில் இருந்து முழுமையாக விலக சீனா தொடர்ந்து பிடிவாதம் சாதித்து வருகிறது. மேலும், இந்திய எல்லை பகுதிகளில் கட்டுமானத்தை மேற்கொண்டு இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது சீனா.

இந்த நிலையில் இந்திய ராணுவ தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் முப்படை தளபதிகளும் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். ராணுவ தினத்தில் உரையாற்றிய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே எல்லையில் குடைச்சல் தரும் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். நாட்டின் எல்லையில் உள்ள நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றும் எந்தவொரு முயற்சியையும் முறியடிப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

சமமான, பரஸ்பர பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் ஏற்கனவே உள்ள விதிமுறைகள் மூலம் கருத்து வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளில் உள்ள வேறுபாடுகள் சிறந்த முறையில் தீர்க்கப்படுகின்றன நம்புவதாக கூறிய அவர் அமைதியே நமது விருப்பம். நமது உள்ளார்ந்த வலிமையிலிருந்து பிறந்த அமைதியை யாரும் ஒருபோதும் தவறாக நினைக்க கூடாது' என்று கூறினார். பயங்கரவாதத்தின் மூலத்தைத் தாக்கும் நமது திறனையும் விருப்பத்தையும் ராணுவ நடவடிக்கைகள் ஏற்கனவே நிரூபித்துள்ளன என்றும் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே கூறினார்.

 இந்திய ராணுவ தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
 

Tags :

Share via