திறமையற்ற பஞ்சாப் அரசு ; சித்து விமர்சனம்

by Editor / 09-05-2021 08:12:34am
திறமையற்ற பஞ்சாப் அரசு ; சித்து  விமர்சனம்

 "திறமை இல்லாத காரணத்தால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்கவேண்டிய நிலை, மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது," என, பஞ்சாப் அரசை, காங்., - எம்.எல்.ஏ., நவ்ஜோத் சிங் சித்து விமர்சித்துள்ளார். பஞ்சாபில், கடந்த, 2015ம் ஆண்டு, சீக்கியர்களின் புனித நுால் கிழித்தெறியப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்காபூரா பகுதியில், சீக்கிய மதத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இதுகுறித்து, அப்போதைய ஐ.பி.எஸ்., அதிகாரி குன்வர் விஜய் பிரதாப் சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். எனினும், அதிகாரி விஜய் பிரதாப் சிங்கின் விசாரணை மீது அதிருப்தி தெரிவித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், அவர் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையை ரத்து செய்து, கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.மேலும், இதில் மீண்டும் விசாரணை நடத்த புதிய குழுவை அமைக்க, மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நீதிமன்ற உத்தரவை ஏற்று, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, மாநில அரசு, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. விசாரணை நடத்தி முடிக்க, ஆறு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து, சீக்கிய மதத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு, காங்., - எம்.எல்.ஏ., நவ்ஜோத் சிங் சித்து, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தன் சொந்த அரசையே விமர்சித்து, சித்து கூறுகையில்,"திறமை இல்லாத காரணத்தால், மாநில அரசுக்கு, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது," என்றார்.

 

Tags :

Share via