உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறதா பாஜக ? கருத்துக்கணிப்பில் தகவல்.

by Writer / 23-01-2022 06:42:52pm
உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறதா பாஜக ? கருத்துக்கணிப்பில் தகவல்.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  அந்த மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.  இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன.


சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 312 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.  இந்நிலையில், உத்தர பிரதேச தேர்தல் தொடர்பாக 7 முன்னணி ஊடகங்கள் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன.


இதன்படி, ஏபிபி நியூஸ், சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 223-235 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாடி கூட்டணி 145-157 இடங்களை கைப்பற்றும். பகுஜன் சமாஜ் 8-16, காங்கிரஸ் 3-7 இடங்களை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா டிவி நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 230-235, சமாஜ்வாடி கூட்டணி 160-165, பகுஜன் சமாஜ் 2-5, காங்கிரஸ் 3-7 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


ரிபப்ளிக் டிவி, பி மார்க் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 252-272, சமாஜ்வாடி கூட்டணி 111-131, பகுஜன் சமாஜ் 8-16, காங்கிரஸ் 3-9 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


நியூஸ் எக்ஸ், போல்ஸ்டாரட் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 235-245, சமாஜ்வாடி கூட்டணி 120-130, பகுஜன் சமாஜ் 13-16, காங்கிரஸ் 4-5 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.


டைம்ஸ் நவ், வீட்டோ இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 227-254, சமாஜ்வாடி கூட்டணி 136-151, பகுஜன் சமாஜ் 8-14, காங்கிரஸ் 6-11 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜி, டிசைன்பாக்ஸ்டு நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 245-267, சமாஜ்வாடி கூட்டணி 125-148, பகுஜன் சமாஜ் 5-9, காங்கிரஸ் 3-7 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்தியா நியூஸ், ஜன் கி பாத் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 226-246, சமாஜ்வாடி கூட்டணி 144-160, பகுஜன் சமாஜ் 8-12, காங்கிரஸ் 0-1 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த 7 முன்னணி ஊடகங்களின் கருத்து கணிப்புகளை ஒப்பிடும்போது சராசரியாக பா.ஜ.க. கூட்டணி 235-249, சமாஜ்வாடி கூட்டணி 137-147, பகுஜன் சமாஜ் 7-13, காங்கிரஸ் 3-7 தொகுதிகளை கைப்பற்றக்கூடும் என தெரிய வந்துள்ளது.


உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன.  ஆட்சி அமைக்க 202 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஏழு முன்னணி ஊடகங்களின் கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எனினும் கடந்த தேர்தலைவிட பா.ஜ.க.வுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும் என்று தெரிகிறது.


உ.பி.யில் 3 அமைச்சர்கள் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ளனர்.  அவர்களில் பெருமளவிலானோர் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர். முதல்-அமைச்சர் ஆதித்யநாத் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். எனினும் பா.ஜ.க.வின் தேர்தல் வியூகத்தால் அந்த கட்சி அறுதிப்பெரும்பான்மையை எட்டிவிடும் என்று நம்பப்படுகிறது.


உ.பி. தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைத்தால், வரும் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் அந்த கட்சி மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via