24 மணி நேரத்தில் 30 சதவீதம் உயர்வு... கேரளாவில் ஓணம் பண்டிகை தளர்வால் கொரோனா அதிகரிப்பு

கேரளாவில் அடுத்த நான்கு வாரங்களில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும்படி கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. மொகரம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி இந்த ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது பாதிப்பு அதிகரிப்பதால் ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்துள்ளது. புதிய பாதிப்பு 31445 ஆக பதிவாகி உள்ளது. மொத்த பாதிப்பு 38,83,429 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 215 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 19,972 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்திலேயே எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிக அளவாக 4,048 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த நான்கு வாரங்களில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும்படி கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அழைப்பு விடுத்துள்ளார். ஓணம் பண்டிகையின்போது திரண்ட பொதுக் கூட்டங்களின் வெளிப்பாடு அடுத்த 7-10 நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக டெல்டா வகை வைரஸ் பரவல் அதிக அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
கேரளாவில் தொற்று அதிகரிப்பதை மேற்கோள் காட்டி பேசிய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், வரவிருக்கும் பண்டிகைக் காலம் குறித்து மற்ற மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த அனைத்து சாத்தியமான பொது சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்
Tags :