மேற்குவங்க எதிர்கட்சித் தலைவராக  சுவேந்து அதிகாரி தேர்வு

by Editor / 10-05-2021 05:00:40pm
மேற்குவங்க எதிர்கட்சித் தலைவராக  சுவேந்து அதிகாரி தேர்வு



மேற்கு வங்க சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக நந்திகிராமைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ சுவேந்து அதிகாரி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். கொல்கத்தாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேற்கு வங்க சட்டசபையில் 77 எம்எல்ஏக்களைக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்த நிலையில், சட்டசபையின் எதிர்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பதை முடிவு செய்ய ரவிசங்கர் பிரசாத் மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவை மத்திய பார்வையாளர்களாக பாஜக நாடாளுமன்ற வாரியம் நியமித்தது.திரிணாமுல் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை நந்திகிராம் தொகுதியில் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி தோற்கடித்த நிலையில், அவரையே சட்டசபை எதிர்கட்சித் தலைவராக பாஜக தேர்ந்தெடுத்துள்ளது.
அவரது பெயர் எதிர்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்ட உடனேயே, தனது கட்சி சகாக்களுடன் உரையாற்றும் போது, ​​"என்னை எதிர்கட்சித் தலைவராக ஆக்கிய கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்ற முயற்சிப்பேன். இந்த சட்டமன்றத் தேர்தலில், நாம் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும். ஒன்று தோல்வியுற்ற முதலமைச்சர் வேட்பாளர் மம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இது வங்காளத்தில் முதல் முறையாக நடந்தது. இரண்டாவதாக, முதல் முறையாக, மாநில சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் இடது முன்னணியின் பிரதிநிதிகள் யாரும் இருக்க மாட்டார்கள். மூன்றாவது முக்கியமான விசயம் முதன்முறையாக 77 பாஜக எம்எல்ஏக்கள், இவ்வளவு பெரிய அளவில் சட்டசபையில் இருப்பார்கள்.” என்றார்.
தேர்தலுக்கு பிந்தைய பாஜக மீதான திரிணாமுல் கட்சியினரின் வன்முறையை கண்டித்த ​​அவர், "திரிணாமுல் கட்சியின் தொண்டர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்குவது துரதிர்ஷ்டவசமானது. பல கிராமங்கள் அழிக்கப்பட்டு மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக அண்டை மாநிலங்களுக்கு ஓடியுள்ளனர். எங்கள் மக்கள் அசாமில் அகதிகளைப் போல வாழ்வது வேதனையானது. இந்தியாவில் அகதிகளைப் போல இந்தியர்கள் வாழ்கின்றனர். மாநிலத்தில் அமைதிக்காக பாடுபடும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறினார்.
நந்திகிராமில் வாக்குப்பதிவு ஏப்ரல் 1’ஆம் தேதி நடைபெற்றது. இந்த முறை அங்கு 88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2016 உடன் ஒப்பிடும்போது சுமார் 1 சதவீதம் அதிகம். 2019’இல் வாக்களிப்பு சதவீதம் 86.9’ஆக இருந்தது.
மே 2’ஆம் தேதி மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜி தனது கட்சியை ஒரு மகத்தான வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். ஆனால் நந்திகிராம் தொகுதியில் தனது முன்னாள் வலதுகரமாகத் திகழ்ந்த சுவேந்து அதிகாரியால் அவருக்கு தோல்வி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via