பிரதமர் மோடி ஐதராபாத் வருகிறார்

by Admin / 04-02-2022 11:04:54am
பிரதமர் மோடி  ஐதராபாத் வருகிறார்

ஐதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் ராமானுஜரின் 216 அடி உயர பஞ்ச லோக சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்த 2-ந்தேதி லட்சுமி நாராயண யாகம் தொடங்கியது. வருகிற 14-ந்தேதி வரை இந்த யாகம் நடக்கிறது. இந்த விழா ஏற்பாடுகளை தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
 
கம்பீரமான ராமானுஜரின் பஞ்சலோக சிலை மற்றும் ஆசிரமத்தின் சுற்றுப்புறம் முழுவதும் இரவில் மின்னும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் இரவு 7 மணிக்கு ராமானுஜரின் சிலை மீது ஸ்வீடன் நாட்டின் நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘லேசர் ஷோ’வின் விளக்கு ஒளி பாய்ச்சல் படுகிறது.இதை பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக 187 அடி உயரத்தில் புரொஜக்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிவரும் ஒளியை பொருத்து சங்கீதமும் ஒலிக்கும் வகையில் இந்த லேசர் ஷோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமானுஜரின் சிலையை நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுடமையாக்க உள்ளார். இதற்காக அவர் நாளை பிற்பகல் 2.45 மணிக்கு ஐதராபாத் விமான நிலையம் செல்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு ராமானுஜரின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.

இரவு 7 மணியளவில் ஐதராபாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி விழா நடைபெறும் ஆசிரமம் மற்றும் விமான நிலையம், ஆசிரமத்திற்கான வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 

 

Tags :

Share via