பன்றியின் இதயம் மனிதர்களுக்கு பொருந்துவது ஏன் சாத்தியமாவது எப்படி

by Admin / 04-02-2022 01:41:05pm
பன்றியின் இதயம் மனிதர்களுக்கு பொருந்துவது ஏன் சாத்தியமாவது எப்படி

அமெரிக்காவில் கடந்த மாதம் பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தப்பட்டு வெற்றி அடைந்த செய்தி மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மற்ற விலங்குகளின் உறுப்புகளை ஒப்பிடும்போது பன்றியின் உறுப்புகள் மட்டும் மனித உடலுக்கு கச்சிதமாக பொருந்துவது ஏன் என தெரிந்துகொள்வோம்.

இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளுக்காக காத்திருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மனிதர்கள் இறக்கின்றனர். இந்த நிலையை போக்க விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் ஆய்வு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் அமெரிக்காவில் பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தப்பட்டு அது வெற்றி அடைந்தது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆய்வில் இது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதால் ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள எல்.எம். பல்கலைக்கழகத்தில் இது தொடர்பான ஆய்வு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

குரங்கு உள்ளிட்ட மற்ற விலங்குகளை காட்டிலும் பன்றியின் உறுப்புகள் கிட்டத்தட்ட மனிதர்களின் உறுப்புகளை ஒத்திருப்பதால் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பொருத்தமானதாக உள்ளது. வழக்கமாக , மாற்று விலங்குகளின் உறுப்புகளை மனித உடல் நிராகரித்துவிடும். எனவே ஜெர்மனி ஆய்வாளர்கள் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகர பன்றிகளை ஆய்வுக்கு பயன்படுத்துகின்றனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தொற்றினை உண்டாக்கும் வைரஸ்கள் இவற்றில் இயற்கையாகவே இல்லை.

எனவே இவற்றின் கருமுட்டையை எடுத்து, மரபணு வரிசையில் பன்றிக்கான மரபணுக்களை நீக்கி மனித மரபணுக்களை புகுத்துகின்றனர். பின்னர் பன்றியின் கருப்பையில் இவற்றை செலுத்துகின்றனர். 115 நாட்களுக்கு பிறகு பிறக்கும் பன்றி , இயற்கையாகவே மனித உடலில் பொருத்தும் தன்மை கொண்டதாக இருக்கும் என்கிறார் 20 ஆண்டுகள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் வோல்ஃப்.

இவ்வாறு ஆய்வகத்தில் பிறக்கும் பன்றிகளின் உறுப்புகளை முதலில் குரங்குகளின் உடலில் செலுத்தி சோதனையிட்டு பின்னர் மனிதர்கள் உடலில் செலுத்த திட்டமிட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த ஆய்வு வெற்றியில் முடியும் பட்சத்தில், உடல் உறுப்புகள் கிடைக்காமல் லட்சக்கணக்கான மனிதர்கள் இறப்பதை தடுக்க முடியும். அதே வேளையில் மனிதர்களுக்காக பன்றிகளை வதைப்பது முறையல்ல என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது.

 

Tags :

Share via