12 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு அவசர கால தடுப்பூசி நிபுணர் குழு பரிந்துரை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி. புரத துணைப் பிரிவு கொரோனா தடுப்பூசியான கோர்பேவேக்சை பயாலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இந்த தடுப்பூசியை 5 முதல் 18 வயதுக்குட்டோருக்கு செலுத்துவதற்கான 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
பரிசோதனையில் கோர்பேவேக்ஸ் தடுப்பூசி பாதுகாப்பானது. கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது தெரிய வந்தது.
இதையடுத்து 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு, கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்த அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி பயாலஜிக்கல்-இ நிறுவனம் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்தது.
பயாலாஜிக்கல்-இ நிறுவனம் அளித்த தடுப்பூசி பரிசோதனை தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நிலையில் 12 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர்களின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை அவசர சூழ்நிலையில் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. அனால் தற்போது நடந்து வரும் தடுப்பூசி செலுத்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
அவசர கால பயன்பாட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் கோர்பேவேக்ஸ் தடுப்பூசிக்கு இந்திய தலைமை மருந்து கட்டுபாட்டாளர் கழகம் விரைவில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் முதல் தொகுப்பை மத்திய அரசு இன்று பெறுகிறது.
இந்த தடுப்பூசியை வாங்குவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு 21-ந்தேதி மத்திய அரசு ஒப்புதல் செய்தது. இதற்காக ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பயாலாஜிக்கல்-இ நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடி முன்பணமாக கொடுத்தது.
மொத்தம் 30 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதில் முதல் தொகுப்பு தடுப்பூசி மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிறது. பயாலாஜிக்கல்-இ நிறுவனம் ஏற்கனவே 25 கோடி டோஸ்களை தயாரித்துள்ளது. மீதமுள்ள டோஸ்களை வரும் வாரங்களில் தயாரித்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயாலாஜிக்கல்-இ நிறுவனம் விரைவில் 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Tags :