ஏழைகள், வெளிமாநிலத்தவர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு; கர்நாடக  அரசு உத்தரவு

by Editor / 12-05-2021 05:26:07pm
ஏழைகள், வெளிமாநிலத்தவர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு; கர்நாடக  அரசு உத்தரவுகர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதேசமயம் புலம்பெயர் தொழிலாளர்கள், கூலித்
தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டாம் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் இந்திரா கேண்டீன்களில் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இதனை ஏழை, எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகியோர் பெற்று பயனடையலாம். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மே 24ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக பெங்களூரு மாநகராட்சிக்கு இயற்கை பேரிடர் நிதியாக ரூ.300 கோடியை கர்நாடக அரசு விடுவித்துள்ளது.
அதில் ரூ.25 கோடியை இலவச உணவு திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தாவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வராக சித்தராமையா இருந்த போது மிகக்குறைந்த விலையில் உணவு வழங்கும் இந்திரா கேண்டீன்கள் பயன்பாட்டிற்கு வந்தன. ஆனால் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்தது.
கொரோனா நெருக்கடியால் பல மாதங்களாக இந்திரா கேண்டீன்கள் மூடப்பட்டிருந்த சூழலில், தற்போது புத்துயிர் பெற்றுள்ளன. கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை கட்டுமானத் தொழில், உள்கட்டமைப்பு பணிகள் ஆகியவற்றில் அதிகப்படியான புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அப்போது பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு தொழிலாளர்கள் புறப்பட்டுச் சென்றனர். வேலையிழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்த தொழிலாளர்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

 

Tags :

Share via
Logo