பிரச்சாரத்தின் போது குழந்தை பெற்ற பாஜக பெண் வேட்பாளர் வெற்றி

by Writer / 22-02-2022 09:19:14pm
பிரச்சாரத்தின் போது குழந்தை பெற்ற பாஜக பெண் வேட்பாளர் வெற்றி

*பிரச்சாரத்தின் போது குழந்தை பெற்ற பாஜக பெண் வேட்பாளர் வெற்றி*

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சியினர் பல்வேறு இடங்களில் முன்னணியும், வெற்றியும் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியான குமந்தாபுரம் பகுதியில், பாஜக சார்பில் ரேவதி பாலிஸ்வரன் என்பவர் போட்டியிட்டு 738 வாக்குகள் பெற்று, எதிர்த்து நின்ற 5 வேட்பாளர்களை தோற்கடித்துள்ளார்.

பொதுவாக, பெண் வேட்பாளர்கள் என்றால் அவர்களுக்கு ஆதரவாக அவரது கணவரோ, தந்தையோ பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், ரேவதி பாலிஸ்வரனோ நேரடியாக களத்திற்கு சென்று வீதி வீதியாக பிரச்சார பயணத்தில் ஈடுபட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் கூட வீதி வீதியாக சென்று ரேவதி பாலிஸ்வரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்தநிலையில், பிரச்சாரத்தின் போதே, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பிரச்சாரத்தின் போது, பாஜக வேட்பாளர்க்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. 

மேலும், ஒரு கஷ்டமான சூழலிலும் நேரில் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது பொதுமக்களிடையே ரேவதி பாலிஸ்வரனுக்கு ஆதரவையும் பெருக்கியது. 


அதேபோல், வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்று வேட்பாளர்கள் வாக்குப்பதிவு மையத்திற்கு 100 மீ தொலைவில் நின்று கொண்டு வாக்களிக்க வருபவர்களிடம் ஆதரவு கேட்பர். ஆனால் ரேவதி பாலிஸ்வரனோ வாக்களிக்க கூட வர முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இருந்தபோதும், எதிர்த்து நின்ற 5 வேட்பாளர்களை தோற்கடித்து வென்றுள்ள சம்பவம் அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

பிரச்சாரத்தின் போது குழந்தை பெற்ற பாஜக பெண் வேட்பாளர் வெற்றி
 

Tags :

Share via