ரூ.2,000 நிவாரணம் வினியோகம் துவங்கியது

by Editor / 15-05-2021 10:13:34am
ரூ.2,000 நிவாரணம் வினியோகம் துவங்கியது

தமிழக அரசு அறிவித்தபடி, ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால நிவாரணத்தின் முதல் தவணையான, 2,000 ரூபாய், இன்று முதல் வழங்கப்பட்டது.முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், 2.07 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கும், கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, தலா, 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அந்தத் தொகை, இரண்டு தவணையாக வழங்கப்பட உள்ளது. அதில் முதல் தவணையான, 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, சென்னை தலைமை செயலகத்தில், 10ம் தேதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்; 15ம் தேதி முதல், ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு பணம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.இதற்காக, 4,153 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் தவணை நிவாரண தொகை வழங்கும் பணி, ரேஷன் கடைகளில், இன்று காலை, 8:00 மணிக்கு துவங்கியது. மதியம், 12:00 மணி வரை வழங்கப்படும். அடுத்த ஒரு வாரத்திற்கு நிவாரண தொகை வழங்கப்படும். ரேஷன் கடைகளில் கூட்டம் சேருவதை தடுக்க, சமூக இடைவெளியை பின்பற்றி, தினமும் தலா, ஒரு கடையில், 200 கார்டுதாரர்களுக்கு மட்டும் நிவாரண தொகை வழங்கப்படுகிறது.இதற்காக, கடைகளுக்கு எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரங்கள் அடங்கிய டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள்,கார்டுதாரர்களின் வீடுகளில் முன்கூட்டியே வழங்கியுள்ளனர். ரேஷன் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதுடன், நிவாரண தொகை வழங்கும்பணியை உன்னிப்பாக கண்காணிக்குமாறு, மாவட்ட கலெக்டர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.இரண்டாம் தவணை நிவாரண தொகை, அடுத்தமாதம் வழங்கப்பட உள்ளது.

 

Tags :

Share via