குமரியில் கடல் சீற்றம்; ஊ ருக்குள் கடல் நீர் புகுந்தது
கொல்லங்கோடு, பொழியூர், தேங்காய்பட்டணம் குளச்சல், முட்டம் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
குமரியில் 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், கடல் சீற்றம் காரணமாக கடலோர கிரமாங்களில் கடல் நீர் புகுந்ததால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களும் கடற்படை, கப்பற்படை அறிவிப்பை தொடர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்த பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்கியுள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று தக்கலையில் 87 மிமீ மழையும் பேச்சிபாறை 81.8 மிமீ மழையும், சிற்றார் 78.4 மிமீ மழையும் பதிவாகி உள்ளது. இதனால் தாமிரபரணி, பரலியாறு , கோதையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வாழை, மரச்சினி, காய்கறி, நெல் உட்பட சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் ஏழாயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
குழித்துறை தரைப்பாலம் என்று அழைக்கப்படும் தடுப்பணை நிரம்பி தண்ணீர் ஆக்ரோஷமாக பாய்ந்து செல்கிறது, 48 அடி மொத்த கொள்ளவு கொண்ட பேச்சிபாறை அணை 43.3 கொள்ளளவை எட்டியுள்ளது. வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அபாய அளவான 44 அடியை தாண்டினால் தண்ணீர் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம் என்பதால் சிதறால், திக்குறிச்சி, ஞாறாம்விளை, குழித்துறை, அஞ்சாலிகடவு, வைக்கலூர் போன்ற தாமிரபரணி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனிடேயே மழையில் காரோடு பாலுக்குழி பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், யூஜின் (32) என்ற பெயின்டர் பலியாகினார். கொல்லங்கோடு, பொழியூர், தேங்காய்பட்டணம் குளச்சல், முட்டம் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
பல்வேறு கிராமங்களில் ராட்சத அலைகள் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மீனவ கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர். பலத்த காற்று வீசிய காரணத்தால் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக மாவட்டத்தில் மின்தடை ஏற்பட்டது.
Tags :