சென்னையில் ரெம்டெசிவர்  மருந்து வாங்க வந்தவர்கள் மறியல்

by Editor / 15-05-2021 04:34:50pm
சென்னையில் ரெம்டெசிவர்  மருந்து வாங்க வந்தவர்கள் மறியல்



சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவர் தடுப்பு மருந்து விற்பனை கூட்ட நெரிசல் மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைக்காக நேரு விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டது.
நேரு விளையாட்டு அரங்கில் வெறும் 300 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் அடிப்படையில் இந்த தடுப்பு மருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனால் நேற்று இரவு முதலே ரெம்டெசிவர் தடுப்பு மருந்து வாங்குவதற்காக நேரு விளையாட்டு அரங்கம் வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.
சரியாக 9 மணிக்கு விற்பனை தொடங்கிய நிலையில் முண்டியடித்துக் கொண்டு தடுப்பு மருந்து வாங்குவதற்கு உள்ளே சென்றனர். இதனால் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக மருந்து வாங்க பதிவேட்டில் பதிவு செய்திருந்த பொதுமக்கள் விரக்தி அடைந்தனர்.புதிதாக வந்தவர்கள் காத்திருந்தவர்கள் என அனைவரும் புகுந்ததால் வெறுப்படைந்து சாலை மறியல் போராட்டத்தில் திடீரென ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.’கீழ்பாக்கம் மருத்துவமனையில் ஒரு வார காலமாக மருந்துக்காக காத்திருந்த எங்களுக்கு கிடைக்கவில்லை .தினமும் பதிவேட்டில் பெயர் மற்றும் ஆதார் எண்ணை பெற்று கொண்டும் முறையாக மருந்து கிடைப்பதற்கு வசதி ஏற்படுத்தித் தரவில்லை’ என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சமாதானமாகினர்.

 

Tags :

Share via