மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை தனியாருக்கு பதிவு செய்த சார் பதிவாளர் மீது வழக்கு
மதுரையைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த 2019-ல் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக வேலை செய்தபோது, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, தனது அதிகார வரம்புக்கு வெளியே உள்ள நிலம் உள்பட பல்வேறு சொத்துக்களை கோவில் அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல் தனியாருக்கு ஆதரவாக பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அதன்பேரில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சார் பதிவாளர் பாலமுருகன் கோவில் சொத்துக்களை தனியாருக்கு பதிவு செய்து கொடுத்தது தெரிய வந்தது. இதனால் இந்து சமய அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பாலமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது அவர் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் பாலமுருகன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags : Case against the registrar who registered the land of Meenakshi Amman temple in Madurai for private use