பாஜகவை மட்டும் அழைத்து ஆலோசனை நடத்தியது ஏன்? தமிழிசையிடம் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புகார்
புதுச்சேரி தலைமை செயலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் அழைத்து ஆலோசனை நடத்தியிருப்பது குறித்து துணைநிலை ஆளுநரிடம் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் எம்.பி வைத்தியலிங்கம் தலைமையில் ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா, கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்ககோரி ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்காத நிலையில் எந்த சட்டத்தின் அடிப்படையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் அழைத்து தலைமை செயலகத்தில் அதிகாரிகள் கூட்டம் நடத்தினர் என்பது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்த சிவா, திமுகவிற்கு எதிர்கட்சி அந்தஸ்தை மக்கள் வழங்கி உள்ளதாகவும், அரசு தவறாக சென்றால் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் உறுதி அளித்தார்.
Tags :