இலங்கையில் ஒரு முட்டை ரூ.28- ஒரு ஆப்பிள் ரூ.150

by Admin / 17-03-2022 01:42:55pm
இலங்கையில் ஒரு முட்டை  ரூ.28- ஒரு ஆப்பிள் ரூ.150

இலங்கையில் ராக்கெட் வேக விலைவாசியால் பொதுமக்கள் விழிபிதுங்குகின்றனர். தங்கத்தின் விலையும் சவரன் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றிலேயே அதிகபட்ச உயர்வு ஆகும்.

ராக்கெட் வேக விலைவாசி: இலங்கையில் ஒரு முட்டை விலை ரூ.28- ஒரு ஆப்பிள் ரூ.150
ரஷிய ஏவுகணைகளால் உக்ரைன் மக்கள் உருக்குலைந்துள்ளனர் என்றால், குட்டித்தீவு நாடான இலங்கையின் மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திகைத்து திண்டாடிப் போயிருக்கின்றனர்.

எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன.

சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம், கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்கு உள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே அத்தியாவசியமற்றவை என்று 367 பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துவிட்டது. இதில் பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள், பழங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளதால், அங்காடிகளின் அடுக்குகளில் இருந்து அவை மறைந்துவிட்டன.

இருக்கும் குறைவான பொருட்களும் மக்களின் கைகளுக்கு எட்டாத உயரத்தை தொட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, ஒரே முட்டையின் விலை ரூ.28 என அதிர்ச்சி அளிக்கிறது. ஆப்பிளும் ஒன்றின் விலை ரூ.150  அடுத்த சில நாட்களில் ஒரு ஆப்பிளின் விலை ரூ.190 ஆக எகிறிவிடும் என்று திகைப்பை கூட்டுகிறார்கள் வியாபாரிகள். பேரீச்சம்பழம் கிலோ ரூ.900-ஐ தொட்டிருக்கிறது. பால், கோதுமை மாவு, சர்க்கரை, பருப்பு என்று சகலமும் இறக்கை கட்டிப் பறக்கின்றன.

பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.283 என்றும், டீசல் ஒரு லிட்டர் ரூ.176 என்றும் புதிய ‘சாதனை’ படைத்திருக்கின்றன. இதன் காரணமாக பல வாகனங்கள் வீதியோரமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டன. பஸ் கட்டணத்தை அதிகரிக்கப் போவதாக பஸ் சங்கங்கள் எச்சரித்திருக்கின்றன.

சமையல் கியாஸ் தட்டுப்பாட்டால் பல உணவகங்கள், பேக்கரிகள் மூடுவிழா கண்டுள்ளன. இந்த காரணத்தால், இன்று முதல் சிற்றுண்டி விடுதிகளை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துவிட்டது.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.260 ஆக சரிந்துள்ள நிலையில் அனைத்து பொருட்கள், சேவைகளுக்கான விலைகள் 29 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா, பன்னாட்டு நாணய நிதியம் என்று பல தரப்பிலும் கடன் பெற்று நிலைமையைச் சமாளிக்க முயல்கிறது இலங்கை. கடனுதவி ஒப்பந்தம் தொடர்பாக அந்நாட்டு நிதி மந்திரி பசில் ராஜபக்சே நேற்று முன்தினம் இந்தியா கிளம்பி வந்தார்.

மின்வெட்டால் இருளில் தவிக்கும் அந்நாட்டு மக்கள் ஒரு மெழுகுவர்த்தியைக் கூட ஏற்ற முடியவில்லை என்று புலம்புகிறார்கள். அதன் இறக்குமதிக்கும்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுவிட்டதுதான் காரணம்.

 

Tags :

Share via