தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகள் அகற்றம்

by Staff / 24-03-2022 10:50:13am
தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகள்  அகற்றம்

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 566 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரத்து 400 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 48 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தேசிய நெடுஞ்சாலை விதிகள் 2008, சாலைகளில் 60 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி இயங்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நகராட்ச, மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சுங்கச்சாவடிகளை அமைக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் விதிகளை மீறி சுங்கச் சாவடிகள் இயங்கி வருவதாகவும், வாகன ஓட்டிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு நிலவி வந்தது.

அண்மையில் டெல்லி சென்ற தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ வேலு, மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, தமிழகத்தில் விதிகளை மீறி இயங்கி வரும் சுங்கச்சாவடிகள் குறித்து எடுத்துரைத்ததுடன், வரும்பரனூர், சென்னசமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச் சாவடிகளை அகற்ற கோரிக்கை வைத்தார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனும், மக்களவையில் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி, அவற்றை அகற்ற வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில்  விதிகளை மீறி தேசிய நெடுஞ்சாலையில் 60 கிலோமீட்டர் இடைவெளிக்குள் இயங்கும் சுங்கச்சாவடிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் அகற்றப்படும் என நிதின் கட்கரி உறுதியளித்தார். இந்த அறிவிப்பால் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகள் அகற்றபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 

19 கிலோமீட்டர் இடைவெளியில்  சூரப்பட்டு , வானகரம் ஆகிய 2 இடங்களில் இயங்கிவரும் சுங்கச் சாவடிகளில் ஏதேனும் ஒன்று அகற்றப்படலாம் என கூறப்படுகிறது. 43 கிலோமீட்டர் இடைவெளியில் இயங்கி வரும் ஆத்தூர்  மற்றும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகள், 46 கிமீ தொலைவுக்குள் இயங்கி வரும் விக்கிரவாண்டி மற்றும் செங்குறிச்சியில் சுங்கச் சாவடிகளில் ஒன்றும் அகற்றப்பட உள்ளது.

இதேபோல செங்குறிச்சி- திருமந்துறை இடையே 52.5 கிலோமீட்டர் தொலைவில் 2 சுங்கச் சாவடிகள் இயங்கும் நிலையில் அவற்றில் ஏதேனும் ஒன்று அகற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
 
43 கிலோமீட்டர் தொலைவுக்குள் சமயபுரம் பூதக்குடியில் இயங்கி வரும் இரண்டு சுங்கச்சாவடிகள், 

பள்ளிகொண்டா வாணியம்பாடி இடையே 50 கிலோமீட்டர் தொலைவுக்குள் இயங்கி வரும் இரண்டு சுங்கச் சாவடிகளில் ஏதேனும் ஒன்று அகற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

கேரளாவில் நெடுஞ்சாலைகளின் தூரத்தை கணக்கிட்டு, 5 ஆக இருந்த சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை மூன்றாக குறைக்கப்பட்டது. இதேபோல தமிழகத்தில் 48 ஆக உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 16 ஆக குறைக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

 

Tags :

Share via