கொரோனாநேரத்தில் ஆயுதப்போர் தேவையா?.. இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் குறித்து வைரமுத்து!

by Editor / 17-05-2021 08:08:10pm
கொரோனாநேரத்தில் ஆயுதப்போர் தேவையா?.. இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் குறித்து வைரமுத்து!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தலத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது.

இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில் போரை நிறுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில்

இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர்

சர்வதேச சமூகத்தின் கண்ணீராகிறது.

இரு நாடுகளின்

உரிமையும் காப்பும்

உறுதிப்பட -

போர் நிறுத்தம் வேண்டும்

உயிரை முன்வைத்துக்

கொரோனா போர் நிகழும் போது

நிலத்தை முன்வைத்து

ஆயுதப்போர் தேவையா?

இரு நாடுகள் மீதும் கவியட்டும்

சமாதான தேவதையின்

இரட்டைச் சிறகுகள்.

என போரை நிறுத்த கவிதை நடையில் கோரிக்கை விடுத்துள்ளார் வைரமுத்து.

 

Tags :

Share via