சிப்காட் அமைக்க எதிர்ப்புத்தெரிவித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி உண்ணாவிரதம்

by Editor / 01-04-2022 12:24:25pm
சிப்காட் அமைக்க எதிர்ப்புத்தெரிவித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரி அருகே உள்ள உத்தனப்பள்ளி பகுதியில், ஓசூர் ஐந்தாவது சிப்காட் தொழிற்பேட்டை  அமைக்க நாகமங்கலம், உத்தனப்பள்ளி, அயரனப்பள்ளி ஊராட்சிகளில் உள்ள சுமார் 3,034 ஏக்கர்  விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட்டு விட்டு  ஏற்கனவே 3 மற்றும் 4 வது சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ள வளாகங்களில் காலியாக உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பயன்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இருப்பினும், அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.விவசாயிகள் தங்களது எதிர்ப்பை பதிவும் செய்யும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்களை  நடத்தி வருகின்றனர்.ஆனாலும் அதிகாரிகள் அவர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்கவில்லை.


இந்நிலையில், சூளகிரி சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி முனுசாமி தனி ஆளாக இருந்து சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். போராட்ட மேடையின் பின்புறம் உள்ள பேனரில் '5,000 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாய நிலத்தை தொழிற்சாலை அமைக்கின்றோம் என்ற பெயரில் விவசாயிகளின் நிலத்தை பறிக்காதே மாநில அரசே'என பதாகை வைத்து இன்று காலை 7 மணி முதல் தனது போராட்டத்தை அவர் தொடங்கியுள்ளார்.
 

 

Tags : AIADMK Deputy Coordinator KP Munuswamy is fasting

Share via