நெல்லை மாவட்ட தலைமை  குற்றவியல் நீதித் துறை நடுவர்  நீஷ் மறைவு

by Editor / 18-05-2021 07:28:28pm
நெல்லை மாவட்ட தலைமை  குற்றவியல் நீதித் துறை நடுவர்  நீஷ் மறைவு


 


நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீஷ் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் நீஷ் (42). கடலூர் மாவட்டம் சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடுவராகப் பணியாற்றி வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றப் பணியிடமாற்றம் மூலம் நெல்லை மாவட்டத் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவராக நியமிக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத் தலைமை நீதித்துறை நடுவராகக் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி பதவி ஏற்றார். பதவியேற்ற இரண்டு நாளில் (ஏப்ரல் 28) உடல்நலக் குறைவு காரணமாக விடுப்பில் சென்றார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். கரோனவால் உயிரிழந்த நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி நீஷ், ஏற்கனவே வள்ளியூர், நாகர்கோவிலில் சிவில் நீதிபதியாக பணிபுரிந்தவர் 
இந்நிலையில், நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18-5-2021) வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா நோய்த் தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீஷ் அவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் நீத்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.  
அவரது பிரிவால் வாடும்  குடும்பத்தினருக்கும், நீதித் துறை அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, சிறப்பு நேர்வாகக் கருதி, 25 இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via