15-ந்தேதி முதல் அமல்-- பீர் விலை உயர்வு
கர்நாடகத்தில் 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்திருந்தார். அப்போது மதுபானங்களுக்கு எந்தவிதமான வரியையும் உயர்த்தி அறிவிக்கவில்லை.
பட்ஜெட்டில் வரி உயர்வு விதிக்கப்படாததால் மதுபானங்களின் விலை கர்நாடகத்தில் உயர்த்தப்படாது என்று கலால்துறை மந்திரி கோபாலய்யாவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் சமீபமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மதுபானங்களை கொண்டு செல்வதற்காக ஆகும் செலவு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பீர் விலையை மட்டும் உயர்த்த பீர் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் பீர் தயாரிக்க பயன்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதால் பீர் விலையை உயர்த்த, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதே நேரத்தில் டீசல், பிற பொருட்களின் விலை உயர்வு காரணமாக பீர் விலையை உயர்த்த வேண்டும் என்று கலால்துறைக்கு, பீர் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து, அதற்கான மனுவையும் கொடுத்துள்ளனர். பீர் விலையை உயர்த்துவது குறித்து கலால்துறையும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீர் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று விலையை உயர்த்த கலால் துறை சம்மதித்தால், ஒரு பாட்டீல் பீர் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்த பீர் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. கலால்துறை அனுமதி வழங்கியதும், வருகிற 15-ந் தேதியில் இருந்தே விலை உயர்வை அமலுக்கு கொண்டு வந்து பீரை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags :