உணவு வைத்தால் கெடாத உண்கலம் அரிய மரம் காய்த்தது
முற்காலத்தில், முனிவர்கள், சிவனடியார்கள், யாசகம் பெறுவோர் கரங்களில், திருவோடானது அடையாளமாக காணப்பட்டது.திருவோடு என்பது ஒரு பிச்சைப்பாத்திரம் என்ற அளவிலேயே, நம் மனதில் பதிவாகியுள்ளது. ஆனால், இது, சிறப்பு வாய்ந்த ஒரு காயாகும். உலகின் பெரிய விதை என்ற சிறப்பை பெற்றது. வெப்ப மண்டல பகுதிகளில் வளரும், இந்த மரத்தின் பூர்வீகம், தென் அமெரிக்க தீவுகளாகும்.
கடலில் விழுந்து மிதப்பதால், இது கடல் தேங்காய் எனவும் அழைக்கப்பட்டது. பூக்கும் பருவத்தில், வாழை போன்று, மரத்தின் தண்டில் பூக்கும் இந்த பூவின் அமைப்பு பெரியதாகவும், நல்ல வாசனையும் கொண்டது.வவ்வால்கள், இந்த பூவிலிருந்து தேனை உறிஞ்சுகின்றன. இதன் மூலம், மகரந்த சேர்க்கை நடக்கிறது.
இந்த வவ்வால்கள் மகரந்த சேர்க்கை நடத்துவது, சில தனித்துவமான தாவரங்களில் மட்டும் தான். கோடை கால இரவில் மலரும், இந்த பூவின் மணம் வவ்வால்களை ஈர்க்கின்றன. திருவோட்டுக்காயின் வெளியோட்டை எளிதில் உடைக்க முடியாது. யானை போன்ற பெரிய விலங்குகள் காலால் மிதித்து, உள்ளிருக்கும் ஊனை உண்டு, விதைகளை வெளியே கொண்டு வருகின்றன.
இத்தாவரம், பரவாமல் போனதற்கும், கடினமான ஓடும் ஒரு காரணமாகும். மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், காணப்படும், திருவோட்டுக்காய் மரங்களின் பழங்களை உண்டு, யானைகள், தங்களது வயிற்றில் நொதித்து, விதைப்பரவலை ஏற்படுத்தி, மரங்களை மீண்டும் மலர வைக்கின்றன.காய் பழமாக, மாற ஏழு மாதமாகும்; இதனை, ஒரு மாதம் உலர வைத்து, பிறகு இரண்டாக பிளக்க வேண்டும்.
இந்த திருவோட்டில் சேமிக்கும் உணவு, விரைவில் கெட்டுப்போவதில்லை என்பதை பட்டறிவால் உணர்ந்த சமணர், சிவனடியார், துறவிகள், திருவோட்டை பயன்படுத்தினர். இதனால், திருவோட்டுக்கு உண் கலம் என்ற பெயரும் உண்டு. நம்நாட்டில், இக்காயை பிச்சைப்பாத்திரம் என்ற அளவில் பார்க்கிறோம். வெளி நாடுகளில், மிகச்சிறந்த கலைப்பொருட்களாக கைவினை கலைஞர்கள் மூலம் உருவாக்கப்பட்டு, உயர்ந்த அழகு பொருளாக உள்ளது.
இன்றும், சிவனடியார்கள், நீள்வட்டமாக காணப்படும் இக்காய்களை சேகரித்து, இரண்டாக பிரித்து, ஓடாக மாற்றி, யாசகம் பெற்று, உணவு அருந்த பயன்படுத்துகின்றனர். சிறப்பு வாய்ந்த இந்த திருவோட்டு காய் மரம், உடுமலை ஏரிப்பாளையத்திலுள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ளது.
சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்தவர்கள், இன்றளவும் காய்க்கும் பருவத்தில் இங்கு வந்து, காய்களை சேகரித்து செல்கின்றனர். இத்தகைய அரிதான மரத்தையும், திருவோட்டு காயையும், மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
அரிய மரமான இதனை பாதுகாக்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் வனத்துறை, பசுமை ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags :