கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.12.5 லட்சம் அபராதம் விதிப்பு

by Staff / 24-05-2022 05:08:43pm
 கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.12.5 லட்சம் அபராதம் விதிப்பு

கேரள மாநிலம் கொல்லம் நிலமேல் பகுதியை சேர்ந்தவர் விஸ்மயா. இவர் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு பயின்று வந்தார். விஸ்மயாவிற்கும், சாஸ்தா நாடு பகுதியை சேர்ந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளர் கிரண் குமாருக்கும் கடந்த 2020 மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது கிரண் குமாருக்கு 100 சவரன் நகை,10 லட்சம் பணம், கார், நிலம் போன்றவை வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் விஸ்மயா கடந்த 2021ஜூன் மாதம் 21ம் தேதி கணவர் வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இதை தொடர்ந்து மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி விஸ்மயா வின் தந்தை விக்ரமன் நாயர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கிரண்குமாரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கிரண்குமார் ஜாமீனில் வெளிவந்தார்.

விஸ்மயா மரணம் தொடர்பாக கிரண்குமார் மீது 304, 306, 498 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதிபதி கே எம் சுஜித் தீர்ப்பு அளித்தார். அதில்,  கிரண் குமார் குற்றவாளி எனவும், அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்தார். தண்டனை விபரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குற்றவாளியான கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 12.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஸ்மயாவின் தாய், இந்த தீர்ப்பில் திருப்தி இல்லை எனவும், தொடர்ந்து மேல் முறையீடு செய்து ஆயுள் தண்டனை பெற சட்ட முயற்சி செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via