ட்விட்டர் அலுவலகங்களில் காவல்துறை ரெய்டு!
காங்கிரஸ் மீதான 'toolKit' விவகாரம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் டெல்லி காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி மோடி மற்றும் இந்தியாவின் பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில், 'toolKit' ஒன்றை காங்கிரஸ் உருவாக்கியுள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்த ஆவணங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரிய புயலைக் கிளப்பிய நிலையில், காங்கிரஸ் கட்சி இதனை திட்டவட்டமாக மறுத்தது. மேலும் தவறான தகவல்களை பரப்பும் பாஜக தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளை நிரந்தரமாக முடக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியது. இந்த நிலையில், சம்பித் பத்ரா உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் வெளியிட்ட குறிப்பிட்ட பதிவுகளுக்கு மட்டும் "manipulated media", அதாவது சந்தேகத்திற்கிடமானது என முத்திரையுடன் ட்விட்டர் வகைப்படுத்தியது.
விசாரணையில் இருக்கும்போதே, சந்தேகத்திற்கிடமானது என முத்திரையிட்டது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து நேற்று டெல்லி சிறப்பு போலீசார் இரண்டு குழுக்காக பிரிந்து, டெல்லி மற்றும் குர்கிராமில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனிஷ் மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தியதாகவும், இது ஆரம்பகட்ட விசாரணை தான் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :