செயல்படாத கல்குவாரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி

by Editor / 02-06-2022 03:20:14pm
செயல்படாத கல்குவாரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பெருமுக்கல் பகுதியை சேர்ந்த பூங்காவனம். இவரது மனைவி புஷ்பா (60). இவர் தனது பேரக்குழந்தைகள் தென் களவாய் கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் குழந்தைகளான வினோதினி (16), ஷாலினி (14), கிருஷ்ணன் (8) ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரியில் துணி துவைத்து விட்டு குளித்ததாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக நீச்சல் தெரியாமல் பேரக்குழந்தைகள் வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களை காப்பாற்ற வேண்டுமென மூதாட்டி முற்பட்டபோது புஷ்பாவும் நீரில் முழுகி உயிரிழந்தார்.

தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பிரம்மதேசம் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பா மற்றும் வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகிய 4 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பிரம்மதேசம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டி பேரன், பேத்திகள் என நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சிறுபான்மையர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெருமுக்கல் கிராமத்துக்கு நேரில் சென்று சம்பவம் நடைபெற்ற பகுதியினை பார்வையிட்டார். 

 

Tags : Four members of the same family drowned in an inactive quarry

Share via