ஆளுநரின் பேச்சு வேற்றுமையில், ஒற்றுமை காண்பது தான் இந்தியா என்பதை உணர்த்தும் விதமாக உள்ளதாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து

by Staff / 13-06-2022 04:44:37pm
ஆளுநரின் பேச்சு வேற்றுமையில், ஒற்றுமை காண்பது தான் இந்தியா என்பதை உணர்த்தும் விதமாக உள்ளதாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை, கடையநல்லூர், காசிதர்மம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கட்சி வளர்ச்சிப் பணிக்காக இன்று வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காசிதர்மம் ஊராட்சியில் பெருந்தலைவர் காமராஜரின் புகைப்படத்தை திறந்து, அப்பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

 அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காசிதர்மம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை என் மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து கொடுத்து இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு தான் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன்.

கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால், இந்த அரசை நம்பி மக்கள் ஏமாற்றத்துடன் தற்போது நிற்கின்றனர்.

தமிழக ஆளுநரின் கருத்து, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்திய நாட்டின் கலாச்சாரம் என்பதை விளக்குவது போல் தான் உள்ளது. அதைத்தான் அவர்கள் வலியுறுத்தி இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இதற்கு மாறுபட்ட கருத்துகளை திணிப்பது நல்லதல்ல என கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசு மீது கூறும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் பொது நலம் கருதியே உள்ளன. தமிழக அரசின் திட்டமிடுதல் சரியில்லை என்பதை தான் பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறி வருகிறார்.

தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பது கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளது.

பொதுவாக, குற்ற வழக்குகளில் முறையான விசாரணை நடத்திய பிறகே தவறு செய்தவர்கள் யார் என்பது தெரியவரும், ஆனால் விசாரணை செய்வதற்கு முன்பே கண்மூடித்தனமாக தாக்குவது என்பது ஏற்புடையது அல்ல. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

பத்திரிகையாளர் மீது உள்ள நம்பிக்கையில் தான் அரசு குறித்த ஊழல் பட்டியலை தங்களிடம் கொடுக்கிறோம். தங்கள் பணியை சிறப்பாக செய்தால் தமிழகத்தில் ஊழல் என்பது நடைபெறாது.

நாட்டில் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட துறைகளில்  அரசியல் தலையீடு என்பது இல்லை. ஊழல் குறித்து விசாரணை நடத்துவதற்கே ஒரு சிலரை விசாரணைக்கு அவர்கள் அழைக்கிறார்கள்.

ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கப்பல் போக்குவரத்து என்பதை செய்ய முறையான அனுமதி பெற்ற பிறகே தொடங்க வேண்டும் என்பது என் கருத்து.

தமிழக அரசின் செயல்பாடுகளை மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர். எதிர்வரும் காலத்தில் வாக்கு சீட்டு மூலம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரானா காலகட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தீவிரமாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர். ஒரு சிறப்பான நேர்மையான அதிகாரி ஆவார்.

மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டதனாலேயே கொரானாவை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என அவர் கூறினார்.

 

Tags :

Share via