பல லட்சம் ரூபாய் மோசடி இளைஞர்.. தன்னை கைது செய்தால் விளைவுகள் இருக்கும் என மிரட்டல்
சென்னை புழல் காவாங்கரை இந்திரா நகரை சேந்த மதன் குமார், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஷங்கரிடம் தன்னை பொறியாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி தருவதாக கூறியுள்ளார்.தொடர்ந்து வீடு கட்டுவதற்காக சங்கர் கொடுத்த 10 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாகிவிட்டார்.இதேபோல் பல்லாவரத்தை சேர்ந்த வெற்றி செல்வன் என்பவரிடம், மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி 7 லட்சம் ரூபாய் பெற்றுகொண்டு, பணி வாங்கி தராமல் தப்பி ஓடினார்.
தொடர்ந்து, முகநூல் மூலம் பழகிய அம்பத்தூரை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் லட்சுமி பிரியா என்பவரிடம் தன்னை சிறைத்துறை அதிகாரி எனக் கூறிக்கொண்ட மதன் குமார், கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி தருவதாக கூறி அப்பெண்ணிடம் 13 லட்சம் ரூபாய் பெற்றுகொண்டு தலைமறைவாகினார்.இதுகுறித்து தனியார் நிறுவன மேலாளர் அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு மறுபடியும் தனது மோசடி தொழிலை அவர் ஆரம்பித்துள்ளார்.
அதுமட்டுமன்றி காவல் அதிகாரி போல் சைரன் வைத்த வாகனத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உலா வந்துள்ளார்.இவரிடம் இதுபோல் ஏமாந்த பலர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் புழல் போலீசார் தனிப்படை அமைத்து அவரை கைது செய்தனர்.
விசாரணையின் போது, காவல் துறையில் முக்கிய அதிகாரிகள் என்னிடம் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என்றும், தன்னை கைது செய்தால் அதன் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் எனவும் மிரட்டியுள்ளார்.இதனையடுத்து, அவரிடம் இருந்த போலி போலீஸ் அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags :