மாணவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்
ஆரல்வாய்மொழி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 13 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆரல்வாய்மொழியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1,000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 12-ம் வகுப்பில் மட்டும் 145 பேர் உள்ளனர். இதில் 2 மாணவர்களுக்கும், சில மாணவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மாணவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதல் காரணமாக 2 பேர் காயம் அடைந்தனர். ஒருவருக்கு மண்டை உடைந்தது. 13 பேர் மீது நடவடிக்கை காயமடைந்த மாணவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தலைமை ஆசிரியை மேரி அல்போன்சாள் அடிதடியில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக பள்ளியின் ஆசிரியர் குழுவினர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட 13 மாணவர்களில் 1 மாணவருக்கு மாற்று சான்றிதழை வழங்கவும், மீதம் உள்ள 12 மாணவர்களை 1 மாதம் பள்ளியில் இருந்து இடைநீக்கமும் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். 13 மாணவர்களில் 1 மாணவன் 10-ம் வகுப்பு மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் மாணவர்களுக்கு ஆதரவாக வெளியில் இருந்து சிலர் வந்து மாணவர்களை தாக்கியுள்ளதாக சில பெற்றோரும் குற்றம்சாட்டினர். அதுகுறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அரசு பள்ளியில் மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags :